Close

அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம்சேலம்

                                சேலம் அரசு அருங்காட்சியகமானது 2007-ஆம் ஆண்டு முதல் சாரதா கல்லூரி சாலை, பேர்லண்ட்ஸ், சேலம் – 636 016 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகமானது உள்ளூர் ஓவியர் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.அ.மு. சுவாமிநாதன் அவர்களால் 1976 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1976 முதல் 1979 வரை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. 1979 ஆம் ஆண்டு முதல் அருங்காட்சியகத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றது.

                                சேலம் அரசு அருங்காட்சியகமானது 1979 முதல் 1996 வரை மூன்று பங்களா கட்டடத்தில் செயல்பட்டது. 1996 முதல் 2007 ஜனவரி வரை நீதிமன்ற கட்டடத்தில் செயல்பட்டது. சுதந்தரத்திற்கு பிறகு மக்கள் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்ட முதல் மாவட்ட அருங்காட்சியகம். இது ஒரு பல்நோக்கு அருங்காட்சியகம். கற்சிற்பங்களை உள்ளடக்கிய தொல்லியல், முந்துவரலாறு, ஆயுதங்கள், இசைக்கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மானுடவியல், தபால்தலைகள், நாணயவியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், மற்றும் ஓவியங்கள் ஆகிய காட்சிப்பொருட்கள் உள்ளன.

                                அருங்காட்சியக கட்டடத்தின் முன்பகுதியில் பார்வையாளர்களை வரவேற்கும் வகையில் சிற்பபூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கற்சிற்பங்கள், கல்வெட்டுகள், வீரக்கற்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கலைத்தன்மை வாய்ந்த கற்சிற்பங்கள்  பல்லவர், சோழர் மற்றும் நாயக்கர் காலத்தினை சார்ந்தவை.

                                கி.பி 12-ஆம் நூற்றாண்டை சார்ந்த பார்சுவநாதர் சிலை பருத்திப்பள்ளியில் கண்டெடுக்கப்பட்டது. இது சேலம் பகுதியில் சமண சமயம் பரவியிருந்தமைக்கு சான்றாக விளங்குகிறது.

                                கி.பி 10 -ஆம் நூற்றாண்டை சார்ந்த மகதேசன் பெருவழிக்கல் ஆறகலூர் – காஞ்சி இடைய இருந்த பெருவழிச் சாலைக்கு சான்றாக உள்ளது.

                                குறுநில மன்னர்களான இராமச்சந்திரநாயக்கர், வணங்காமுடி ஆகியோரின் கற்சிலைகள் உள்ளூர் வரலாற்றுக்கு முக்கிய சாட்சியாக உள்ளது. தமிழ் எழுத்தின் வளர்ச்சி நிலைகள், உள்ளூர் தெய்வங்களின் சுடுமண் சிற்பங்கள், ஆங்கிலேயர் கால பீரங்கிகள், டைனோசர் மாதிரி உருவம் ஆகியவை கற்சிற்ப பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

                                காட்சிக்கூடத்தில் மாவட்டத்தின் முக்கியமான தலைவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஓவியகூடத்தில் D.P.  ராய்சௌத்ரி, S.K.ராஜவேல் ஆகிய தற்கால ஓவியர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

                                பூச்சி தின்னும் தாவரங்கள், மரவகைகள், பாம்புகள், மீன்கள், நண்டுகள், புலித்தோல், ஆமை ஓடு, புதைப்படிவங்கள், மரசிற்பங்கள், ஓலைச்சுவடிகள், சுடுமண் பொருட்கள், சங்கு வளையல்கள், நாணயங்கள், வெளிநாட்டு பணங்கள், தபால்தலைகள், முதல் நாள் உறைகள், அழகிய கலைப்பொருட்கள், திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட 50,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழைய கற்கால ஆயுதங்கள், சேர்வராயன் மற்றும் கொல்லிமலைகளில் கண்டெடுக்கப்பட்ட 20,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதிய கற்கால ஆயுதங்கள், வடஇந்திய சிற்பங்களின் மாதிரி உருவங்கள், மாதா கோவில் மணி, பீரங்கி கல்குண்டுகள், ஈட்டிகள், கத்திகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் ஆகியவை பொது மக்களையும், மாணவர்களையும் வெகுவாக கவர்கிறது

 

அருங்காட்சியகம்சேலம்

அரசு அருங்காட்சியகம் துறை